தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாதனைகளை குவித்த ஆப்கானிஸ்தான்; வேதனைகளை குவித்த வங்கதேசம் - Rashid Khan Wickets against Bangladesh

சாட்டோகிராமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்,  ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தி பல சாதனைகளை படைத்துள்ளது.

Rashid Khan

By

Published : Sep 9, 2019, 7:26 PM IST

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி தோல்வி அடைந்திருந்தாலும், ஷகிப்-அல்-ஹசனால் அந்த அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு அந்த அணி கடும் சவாலைத் தந்தது. அதேசமயம், கிரிக்கெட்டில் வளர்ந்துவரும் நாடான ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் ஊருக்கு நடையைக் கட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயஜால சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானின் பந்துவீச்சு அந்தத் தொடரில் எடுபடாமல் போனது.

வங்கதேச அணி

இந்நிலையில், இவ்விரு அணிகளும் சாட்டோகிராமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மோதின. டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்ற ஆப்கானுக்கு இது மூன்றாவது போட்டியாகும். அதேசமயம், வங்கதேச அணிக்கு இது 115ஆவது போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் வங்கதேச அணிக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்போட்டி அவர்களது சொந்த மண்ணில் ஷகிப் தலைமையில் எதிர்கொள்வதால், வங்கதேச அணிதான் நிச்சயம் வெற்றிபெறும் என பெரும்பாலான ரசிகர்கள் நினைத்தனர்.

ரஷித் கான்

மறுமுனையில், சிறந்த லெக் ஸ்பின்னராக வலம்வரும் ரஷித் கானை ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணி நிர்வாகம் நியமித்தது. இதன்மூலம், இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இருப்பினும், இப்போட்டியில் வெற்றிபெற்று அச்சாதனையை கொண்டாட வேண்டும் என அவரது ரசிகர்கள் நினைத்தனர். அதற்கு தகுந்தாற்போல் டாஸில் தொடங்கி கடைசி நாள் வரை அனைத்தும் ரஷித் கானுக்கு சாதகமாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணயில் ரஹ்மத் ஷா சதம், அஸ்கார் ஆப்கன் 92 ரன்கள் அடித்தனர். இவர்களுடன் ரஷித் கான் 51 ரன்கள் அடித்ததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை குவித்தது. இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் ரஷித் கான், முகமது நபி ஆகியோரது சுழற்பந்துவீச்சுக்கு பதில் சொல்ல தெரியாமல் 205 ரன்களுக்கு சுருண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷகிப் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். ரஷித் கான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான்

இதன்மூலம், 137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ரஹ்மத் ஷா இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். ஆனாலும், இப்ராஹிம் ஷட்ரான் 87 ரன்கள், அஸ்கார் ஆப்கன் 50 ரன்கள் என அந்த அணி 260 ரன்களை எடுத்தது.

இதனால், 398 என்கிற இமாலய இலக்கை ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது. இதனால், இப்போட்டியின் தொடக்கத்தில் வங்கதேச அணி வெற்றிபெறும் என நினைத்த ரசிகர்கள், டிரா செய்தால் போதும் என்கிற நிலைக்கு வந்தனர். அத்துடன் இப்போட்டியில் அவ்வப்போது மழையும் குறுக்கிட்டதால் நிச்சயம் இப்போட்டி டிராவில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

டிரா செய்வதற்காக வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்தது. முதல் இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சவுமியா சர்காரை எட்டாவது வரிசையிலும், அதேசமயம், முதல் இன்னிங்ஸில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய லிதான் தாஸை ஓப்பனிங் வரிசையிலும் களமிறக்கியது.

ஷகிப்

கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்ற வசனத்தை போல், வங்கதேச அணியின் இந்த பிளான் அமைந்தது. ஏனெனில் . லிதான் தாஸ் ஒன்பது ரன்களுக்கு நடையைக் கட்டினார். 44.2 ஓவரில் வங்கதேச அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குவந்ததது. சவுமியா சர்கார் (0), ஷகிப் (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். ரஷித் கான் மூன்று, சஹிர் கான் இரண்டு, முகமது நபி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஐந்தாவது நாளின் இறுதியில் தொடங்கிய மழையின் ஆட்டம் ஐந்தாவது மற்றும் கடைசி நாளிலும் நீடித்ததால், இப்போட்டி டிரா ஆகும் என்ற நம்பிக்கை வங்கதேச ரசிகர்களுக்கு அதிகரித்தது. மூன்றரை மணி நேரம் தாமதமாகத்தான் கடைசி நாள் ஆட்டம் (இந்திய நேரப்படி ஒரு மணி) தொடங்கியது. ஆனாலும், 44.2 முதல் 46.3 ஓவர்வரை என 2.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால், கடைசி நாள் ஆட்டம் இரண்டாவது முறையாக தாமதமாக தொடங்கியது.

மழை

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும், ஆப்கானிஸ்தான் அணி மனம் தளரவில்லை. ஏனெனில் ஆட்டம் இரண்டாவது முறையாக தொடங்கிய முதல் பந்திலேயே ஷகிப் 44 ரன்களுக்கு சஹிர் கானின் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். சவுமியா சர்கார் - மெஹதி ஹசான் ஜோடி 8 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆப்கானுக்கு தலைவலியை தந்தது. இந்த நிலையில், கேப்டன் என்ற பொறுப்பில் பந்துவீச வந்த ரஷித் கான் மெஹதி ஹசான், தைஜூல் இஸ்லாம், சவுமியா சர்கார் ஆகியோரை தனது சுழலால் அவுட் செய்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

விக்கெட் எடுத்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரஷித் கான்

இதனால், வங்கதேச அணி 61.4 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

  • கேப்டனான முதல் போட்டியிலே 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே (20 வயது) கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன்

அதேசமயம் வங்கதேச அணி இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 அணிகளுடனும் தோல்வியை தழுவிய முதல் அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல், இப்போட்டியில் அந்த அணி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே, அவர்கள் தேர்வு செய்த அணிதான்.

மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றார் போல் தயார் செய்ததால், அணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பதில் முழுக்க சுழற்பந்துவீச்சாளர்தான் இடம்பெற்றிருந்தனர். வங்கதேசத்தின் இந்த முடிவு ஆப்கானுக்குதான் உதவியது.

அபு ஜாவித், தஸ்கின் அஹமது ஆகியோர் இப்போட்டியில் விளையாடியிருந்தால் வங்கதேச அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ரஷித் கான், முகமது நபி போன்ற தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும் அணி ஆப்கானிஸ்தான். இதனால், சுழற்பந்துவீ்ச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது வங்கதேசத்தைவிட ஆப்கானிஸ்தானுக்கு அதிகம் தெரியும். ஒட்டுமொத்தத்தில், வங்கதேச அணி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது.

முகமது நபி

இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முகமது நபிக்கு இது சிறந்த ஃபேர்வெல் போட்டியாக அமைந்துள்ளது. இப்போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முகமது நபியுடன் கோப்பையை வாங்கும் ரஷித் கான்

"ஆப்கானிஸ்தான் அணியின் ஜாம்பவான் முகமது நபி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். என்னை போன்று அணியில் இருக்கும் பல இளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் உதவிசெய்துள்ளார். இதனால், எனது ஆட்டநாயகன் விருதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்" என ரஷித் கான் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details