தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 14, 2019, 11:00 PM IST

ETV Bharat / sports

7 பந்துகளில் 7 சிக்சர்கள்...  பேட்டிங்கில் வெறித்தனம் காட்டிய ஆப்கான்ஸ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடர்ந்து ஏழு பந்துகளில் ஏழு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினர்.

AFG

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி இடைக்கால தடை விதித்தப் பிறகு, அந்த அணி பங்கேற்று விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் நிஜிபுல்லாஹ் - முகமது நபி ஜோடி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்களை சேர்த்தது. குறிப்பாக, ஜிம்பாப்வே வீரர் சதாரா வீசிய 17ஆவது ஓவரின் கடைசி நான்கு பந்துகளையும் முகமது நபி சிக்சர்களாக பறக்கவிட்டார்.

ஏழு பந்துகளில் ஏழு சிக்சர்களை விளாசிய நபி - நஜிபுல்லாஹ் சட்ரான்

இதைத்தொடர்ந்து, மட்ஸிவா வீசிய 18ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் எதிர்கொண்ட நஜிபுல்லாவும், தன் பங்கிற்கு தொடர்ந்து சிக்சர்களாக விளாசினார்.

இதன்மூலம், இந்த ஜோடி தொடர்ந்து ஏழு பந்துகளில் ஏழு சிக்சர்களை விளாசியதால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது.

அதிரடியாக விளையாடிய முகமது நபி 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிஜிபுல்லாஹ் சட்ரான் 30 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என 69 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து, 198 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதானால், ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details