அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவின் நொய்டா நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பவுல் ஸ்டெர்லிங், கெவின் ஓ பிரையன் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதில் சிறப்பாக விளையாடி பவுல் ஸ்டெர்லிங் சர்வதேச டி20 அரங்கில் தனது 18ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
பின் ஸ்டெர்லிங் 60 ரன்களிலும், கெவின் ஓ பிரையன் 35 ரன்களிலும் அட்டமிழந்து வெளியேற, அணியின் கேப்டன் பால்பெரின், ஹேரி டெக்டர் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.