வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடிவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதில் குர்பாஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஜசாய் ஒரு ரன் எடுத்து நடையைக் கட்டினார்.
பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆஸ்கர் ஆப்கான் அதன்பின் வந்த நஜீப் தாராகை, நஜிபுல்லா சட்ரான் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆப்கான் அணி முதல் ஆறு ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஆஸ்கர் ஆப்கான், முகமது நபி அதிரடி ஆட்டத்தில் இறங்கினர்.
ஆஸ்கர் ஆப்கான் 37 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முகமது நபி 54 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஏழு சிக்சர்களும் அடங்கும்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் முகமது நபி இதன்மூலம் ஆப்கான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சைபுதீன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே லிட்டன் தாஸ், முஸ்பிகூர் ரஹிம், சாகிப் அல் ஹசன், சவுமியா சர்கார் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் ஆறு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் முகமதுல்லா 39 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்காததால் வங்கதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கான் அணி தரப்பில் மயாஜால சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆப்கான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த முகமது நபி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி முத்தரப்பு டி20 தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.