பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், இன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் 48ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், மூன்றாவது இடத்திலிருக்கும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் அணி ஜோனதன் வேல்ஸ் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோனதன் வேல்ஸ் 36 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். மெல்போர்ன் அணி தரப்பில் கிளின்ட் ஹின்கிளிஃப் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, பீட்டர் சீடிலின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் பீட்டர் ஹென்ட்ஸ்கோம்ப் தனி ஒருவராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனாலும் கடைசி ஓவரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் ஒன்பது ரன்களை மட்டுமே சேர்த்தார். இறுதியில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனால், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இப்போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
விக்கெட் கைப்பற்றிய ஆனந்தத்தில் சிடில் இறுதிவரை போராடிய பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 39 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட 65 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்திலிருந்தார். அடிலெய்ட் அணி சார்பில் நான்கு ஓவர்கள் வீசிய பீட்டர் சிடில் 33 ரன்கள் மட்டும் வழங்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் அரைசதம் அடித்து அடிலெய்ட் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஜோனதன் வேல்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இப்போட்டியின் மூலம், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இப்போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும், 20 புள்ளிகளுடன் தொடர்ந்து முதிலடத்தில் நீடிப்பது மட்டுமில்லாமல் குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:ஒரு கோப்பைக்காக மோதும் ஐந்து டீம்... பிக் பாஷ் புதுமை!