டி10 எனப்படும் பத்து ஓவர்கள் மட்டும் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (பிப்.6) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணி, டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய புல்ஸ் அணியின் குர்பஸ், லீவிஸ், போபாரா, ரூதர்ஃபோர்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய முகமது நபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டியதால் 10 ஓவர்கள் முடிவில் புல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வாரியர்ஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரான், வாசீம் முகமது இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. இதில் பூரான் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ், வாசீம் முகமது இணை எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசி வெற்றியைத் தேடித்தந்தது.
இதனால், 8.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டிய நார்த்தன் வாரியஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி புல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மஹீஷ் தீக்ஷனா ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2021: கம்பேக் கொடுக்கும் ஸ்ரீசாந்த், எதிர்பார்ப்பை கிளப்பும் ஏலம்!