தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க விருப்பம் - டி வில்லியர்ஸ் ஓபன் டாக்

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

AB  de Villiers
AB de Villiers

By

Published : Jan 15, 2020, 3:42 PM IST

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் ஆவார். இவர் மைதானத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பந்தை அடிக்கும் வல்லமை படைத்தவர் என்பதால் அவரது ரசிகர்கள் டி வில்லியர்ஸை மிஸ்டர் 360 என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதிலும் டி20 போட்டிகள் என்றால் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியின் பந்துவீச்சாளரை திணறடிப்பார் டி வில்லியர்ஸ்.

இதனிடையே சிறப்பான பார்மில் இருந்த டிவில்லிர்ஸ், 2018 மார்ச் மாதம் திடீரென்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஐபிஎல் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவந்தார்.

இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். இதுவே பிபிஎல் தொடரில் டி வில்லியர்ஸின் முதல் போட்டியாகும். நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் மேட் ரென்ஷா - டி வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடியால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 40 ரன்களை எடுத்தார்.

இப்போட்டியின் இடையே பேசிய டி வில்லியர்ஸ், அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பமுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது குறித்து தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பவுச்சர், அணி இயக்குநர் கிரீம் ஸ்மித், கேப்டன் டூபிளஸிஸ் ஆகியோருடன் பேசியதாகவும், ஊருக்கு திரும்பிய பின் அதை நிறைவேற்ற முற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

டி வில்லியர்ஸின் ஓய்வுக்குப்பின் தென் ஆப்பிரிக்க அணி சற்று சறுக்கலையே சந்தித்துள்ளது. சமீபத்தில் அந்த அணியின் நிர்வாகத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட முன்னாள் வீரர் மார்க் பவுச்சர், அணியின் கேப்டன் டூபிளஸிஸ் ஆகியோரும்கூட டி வில்லியர்ஸை அணிக்கு திரும்பி கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details