நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (மார்ச் 5) வெலிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் வழக்கம் போல சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர்கள் ஜோஷ் பிலிப்பே, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஆரோன் ஃபின்ச் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
முன்னதாக டேவிட் வார்னர் 2,265 ரன்கள் அடித்ததே ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச சர்வதேச டி20 ரன்னாக இருந்தது. அதனை தற்போது ஆரோன் ஃபின்ச் 2,310 ரன்களை எடுத்து முறியடித்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் ஆரோன் ஃபின்ச் இப்போட்டியில் நிகழ்த்தினார்.