பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக, ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இப்போட்டியில் சதம் அடித்தததன் மூலம், அறிமுகமான இரண்டுவித போட்டிகளிலும் (ஒருநாள், டெஸ்ட்) சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனயைப் படைத்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஆபித் அலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுக்க, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 271 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிவரும் பாகிஸ்தான் அணியின் மூன்றாம் தொடக்க வீரர்களான ஷான் மசூத், ஆபித் அலி ஆகியோர் சதம் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
இதனால், அந்த அணி மூன்றாம் ஆட்டநாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 395 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷான் மசூத் 135 ரன்களிலும் ஆபித் அலி 174 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.