மார்ச் 14, 2001 - இந்த நாளை அவ்வளவு எளிதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறந்துவிட முடியாது.. ஏன் உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் அந்த நாளினை மறக்க முடியாது. இந்திய அணிக்கு மிகமுக்கியமான வருடம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மைல்கல் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் மைல்கல்தான். குஜராத் பூகம்பத்திலிருந்து இந்தியா வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம் அது. இந்திய கிரிக்கெட்டிலும் மீள முடியாத வடுவுடன் அணி விளையாடி கொண்டிருந்தபோது தான் அந்த மேஜிக் நடந்தது.
அந்த போட்டியை டிவியில் பார்த்தவர்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாத அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. டீ கடை, சலூன் கடை என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டமாக கிரிக்கெட்டை ரசித்த நாள்.. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் திருப்புமுனையும் அதுவே. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகள் தொடர் வெற்றி பெற்றுவந்த நிலையில் 2001இல் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அந்த ஆண்டில் இந்திய அணியோ சூதாட்டப்புகாரில் சிக்கி சிதைந்துபோன நிலையில் இருந்தது. சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய அணியை ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். எவ்வளவு பெரிய வெற்றியைக் கண்டாலும் இந்திய அணியால், சூதாட்ட புகாரிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. சச்சினின் பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் சச்சினும் கூறுவார். இந்திய அணி மீது ரசிகர்கள் திரும்பவும் நம்பிக்கை வரவழைக்க, வலுவான எதிராளியை வென்றால் தான் ரசிகர்கள் நம்புவார்கள். அதற்காகவே ஆஸ்திரேலிய அணியின் இந்தியப் பயணம் தேவைப்பட்டது எனக் கூறுவார்.
மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கங்குலியின் சொந்த மண்ணான கொல்கத்தாஈடன் கார்டனில் நடைபெற்றது. முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு இந்திய பத்திரிக்கைகளே இந்திய அணியை கிண்டலடித்தனர். கேப்டன்சியை விட்டுவிட்டு கங்குலி ஓடிவிடுவார் என பல விமர்சனங்கள் வெளிப்படையாக வந்தது. அதற்கு கங்குலி செய்தியாளர் சந்திப்பில், என் ஊரில் தோற்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார்.
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், லட்சுமண் மட்டும் 59 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சீட்டுகட்டைப்போல் சரிந்தனர். இந்திய அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 274 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்தியாவுக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், சடகோபன் ரமேஷ்30 ரன்களில் வெளியேற, வழக்கத்திற்கு மாறாக லட்சுமண் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார். ஒரு கேப்டன் தனக்கு தோன்றிய முடிவினை மட்டுமல்ல, எதிரணியினர் எதிர்பார்க்காத முடிவினையும் எடுக்க வேண்டும். அதைதான் கங்குலி செய்தார்.
டிராவிட் களமிறங்குவார் என எதிர்பார்த்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 'அள்ளு'விட்டது. களமிறங்கியது லட்சுமண். ஏனென்றால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக லட்சுமணின் சாதனைகளைப் புரட்டி பார்த்தால் தெரியும். இவருடன் டிராவிட் சேர, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 254 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
நான்காம் ஆட்ட நாளில் (மார்ச் 14) லட்சுமண்-டிராவிட் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளத் தொடங்கினர். தொடர்ந்து ஆட ஆட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் பந்துவீச்சாளர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் என்றாலும், இந்த இணையை எந்த வியூகங்கள் வகுத்தும் வீழ்த்தமுடியவில்லை.
'The Wall' அண்ட் தி 'God of Second Innings' இருவரும் பேட்டை நங்கூரமாய் பாய்ச்சி நிற்க ஆஸ்திரேலிய அணியினரோ செய்வதறியாது தவித்தனர். ஒரு கட்டத்தில் வார்னேவுடைய ட்ரேடு மார்க் பந்தான காலின் பின் பக்கத்தில் பிட்ச் ஆகி போல்டாகும் பந்தை மட்டுமே வீச, லட்சுமனனோ தனது சாதுரியத்தால் கிரீஸைலிருந்து இறங்கி வந்து வார்னேவுடைய பந்தை எளிதாக பவுண்டரியாக மாற்றினார். திகைத்துப்போய் நின்ற ஆஸ்திரேலிய அணி மெக்ராத்தை பார்க்க, மெக்ராத் பந்துவீச வந்தார். அவரது பந்தை லட்சுமண் ப்ரண்ட் ஃபுட்டில் பவுண்டரிகளாக விளாசினார்.
கிட்டதிட்ட, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் மற்றும் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் மட்டுமே பந்துவீசவில்லை என்ற நிலை வந்தது. ரிக்கி பாண்டிங், ஹெய்டன் எல்லாம் பந்துவீசி அன்று தான் உலகம் பார்த்தது. அன்றைய நாளில் இந்திய அணியின் கான்ஃபிடன்ஸ் எங்கயோ உயரப் பறந்தது. அனைத்து கிரிக்கெட் அணிகளையும் கதறவிட்ட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்மேன்களிடம் கதறினர். லட்சுமண் தனது முதல் இரட்டை சதத்தை 304 பந்துகளில் பதிவு செய்தார். டிராவிட்டும் சதத்தை 205 பந்துகளில் கடக்க, ஆஸ்திரேலிய அணி தோல்வியை ஒப்புக்கொண்டது போல் சோர்வாக ஆடத் தொடங்கியது.
முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரின் தனிநபராக எடுத்த அதிகபட்ச ரன்னான 236-ஐ லட்சுமண் முறியடித்தார். அன்றைய நாளின் முடிவில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்த்தது. மக்களுக்கு, அன்றைய இந்திய அணி பார்வையாலேயே தாங்கள் சாதித்ததை உணரச் செய்தனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து பேட்டிங் ஆடியதில் இரவெல்லாம் லட்சுமணுக்கு தூக்கமில்லை. ஐந்தாம் நாள் ஆட்டத்தைப் பார்க்க ஸ்டேடியத்திலிருந்த 80 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பின. போட்டியின் டிக்கெட்டுகள் கிடைக்காமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வெளியில் காத்திருந்தனர். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் லட்சுமண் 300 ரன்கள் அடித்து விட வேண்டும் என்ற இந்தியாவின் ஆசையோடு லட்சுமண்-டிராவிட் இணை களமிறங்கியது. அதற்குபின் லட்சுமண் மேலும் 6 ரன்கள் சேர்த்த நிலையில், 281 ரன்களுக்கு மெக்ராத் பந்தில் ஆட்டமிழந்தார்.
நிச்சயம் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் மட்டுமல்ல இந்தியாவே எழுந்து நின்று கைதட்டி இருக்கும். தொடர்ந்து டிராவிட் 180 ரன்களில் அதிர்ஷ்டமின்றி ரன் அவுட் ஆகி அட்டமிழக்க, இந்திய அணி 7 விக்கெட் இழந்து 657 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 75 ஓவர்களில் 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை ஹர்ஜனும், டெண்டுல்கரும் போட்டிபோட்டுக் விக்கெட் வேட்டையை நடத்தி வரலாற்று வெற்றியை வசப்படுத்தினர். அந்த ஆட்டத்தில் இளம் வீரராக அறியப்பட்ட ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் உள்பட 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சமீபத்தில் கங்குலி இந்த போட்டி குறித்து பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியவர் லட்சுமண் இன்னிங்ஸ் பற்றி பேசினார். ஒட்டுமொத்த இந்தியாவும் குஜராத் பூகம்பத்திற்குபின், கொண்டாட ஏதும் இல்லாதிருந்த நிலையில், அன்றையப் போட்டியின் வெற்றியை தீபாவளியாய் கொண்டாட வைத்து ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் வாக், மார்ச் 14ஆம் தேதியை எனது வாழ்நாளில் இருந்து மறக்க வேண்டும் என பின்னாளில் தெரிவித்தார்.
அமைதிய வச்சு அளக்காத.. புயல் அடிக்கிற அறிகுறி அது தான்னு ஒரு வரி இருக்கும்.. அது லட்சுமணுக்கு மிகச்சரியாகப் பொருந்தும். அன்றைய நாளை இந்திய அணி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். அந்த போட்டி நடைபெற்று 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இன்றும் அந்த நாளினை ட்விட்டரில் ட்ரண்ட் செய்யாத ஆண்டுகள் இல்லை.
அதுவும், நம் தலைமுறையில் ஆஸ்திரேலிய அணியை பார்த்தாலே பயத்தில் நடுங்கும் கிரிக்கெட் அணிகளுக்கிடையே, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்துவீச்சை எதிர்த்து தாக்குதல் ஆட்டம் ஆடி வென்றபோட்டி இந்திய ரசிகர்களின் நினைவில் என்றும் அழியாத நாள்.