இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அணியின் பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன் ஜூன் மாதம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடியை விலக்கி, புதிய பயிற்சியாளராக ட்ரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளராக இருந்த சைமன் ஹெல்மோட் நீக்கப்பட்டு தற்போது பிராட் ஹாடினை துணைப் பயிற்சியாளராக ஹைதராபாத் அணி நியமித்துள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெற்ற ஹாடின், அதன்பின் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.