கரோனா காரணமாக 117 நாள்கள் நடைபெறாமல் இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஜூலை எட்டாம் தேதியிலிருந்து மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செளதாம்டனில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 204 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, 114 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய கடைசி ஆட்ட நாள் தொடக்கத்தில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டத்தால் இப்போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷெனான் கேப்ரியல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இப்போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், "இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதற்கு முன்னால் கடந்த முறை (2017இல்) சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹெட்டிங்கிலியில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். அதனால் அந்த வெற்றியின் உணர்வு எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.