இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பார்டர், “நான் பும்ராவின் மிகப்பெரும் ரசிகன். ஏனெனில் அவர் எங்கள் அணியை வீழ்த்தும் திறன் படைத்தவராக உள்ளார். கடந்த முறை நடந்த டெஸ்ட் போட்டியில் அதனை செய்தும் காட்டினார். அதனால் அவரது பந்துவீச்சை இம்முறை ஆஸ்திரேலியர்கள் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்ற கவலை உள்ளது. பும்ரா இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாகவும் விளங்குவார். அதேசமயம் இந்திய அணியினர் வலிமையான பேட்டிங் ஆர்டரையும் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, இதுவரை 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘இஷாந்த் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்’ - அஜிங்கியா ரஹானே