கோவை மாவட்டம், பொள்ளாட்சி அருகேவுள்ள மாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (28). பிறவி மாற்றுத் திறனாளியான சீனிவாசன், சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வத்தைக் கொண்டுள்ளார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர், தனது பாட்டியின் அரவணைப்பில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
தொடர்ந்து கிரிக்கெட்டின் மேல் இருந்த தீராத காதலால், பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, அதன்மூலம் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியிலும், தனது கிரிக்கெட்டை தொடர்ந்து சீனிவாசன், கல்லூரி, பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்று, தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார். இருமுறை வாகன விபத்திலும் சிக்கிய சீனிவாசன், தனது விடா முயற்சியின் காரணமாக, அதிலிருந்து மீண்டு தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வரும் நவம்பரில் ஐபிஎல் போட்டி போன்றே மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான டிபிஎல் போட்டி துபாயில் நடக்கவுள்ளது. இதில், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து அணிகள் விளையாட உள்ளன.