தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 29, 2019, 10:25 PM IST

ETV Bharat / sports

இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket

10 ஆண்டுகளை தசாப்தம் என்பார்கள். அப்படி பார்க்கும்போது இந்த தசாப்தத்தில் (2010 to 2019) 90'ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கைதான் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. அதுபோல் 90'ஸ் கிட்ஸ்களின் பிடித்த கிரிக்கெட்டர்களும் தங்களது ஓய்வை அறிவித்துவிட்டார்கள். அவர்கள் குறித்த நினைவுகள் சில...

90-s-kids-favourite-cricketers-got-retired-in-this-decade
90-s-kids-favourite-cricketers-got-retired-in-this-decade

சமூக வலைதளங்களில் 2019ஆம் ஆண்டு நிறைவையொட்டிய நினைவுகளோடு, இந்த 10 ஆண்டுகளின் சிறந்த நினைவுகளும் பகிரப்பட்டுவருகிறது. 2010 டூ 2019, 10 ஆண்டுகள். லட்சக்கணக்கான நினைவுகள். வாட்ஸ்அப் வந்து இப்போ டிக்டாக்வரை ட்ரெண்டாகிவருகிறது. உடன் படித்த நண்பர்கள் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டார்கள், அதுபோல் இந்திய அணியும் உலகக்கோப்பையை வென்றுவிட்டு அடுத்த இரு உலகக்கோப்பையைத் தாரைவார்த்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கைதான் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. அதுபோல்தான் 90'ஸ் கிட்ஸ்களின் பிடித்த கிரிக்கெட்டர்களும் ஓய்வை அறிவித்துவிட்டார்கள். அவர்கள் குறித்த நினைவுகள் சில...

1. வீரேந்தர் சேவாக் (1999 to 2013)

இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண 80 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். ஆனால் இந்திய மைதானங்களில் டெஸ்ட் போட்டியைப் பார்ப்பதற்கு ஆள்கள் இல்லை. ஆனால் இந்தக் காட்சிகள் சேவாக் இருக்கும்வரை யார் கண்ணிலும் படவில்லை.

இவருக்கு மூன்று ஸ்லிப் ஃபீல்டர்கள், ஒரு கல்லி, ஒரு தேர்டு மேன் என எத்தனை ஃபீல்டர்களை பவுண்டரி எல்லைக்கோட்டில் நிறுத்தினாலும், அவர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் பந்து பவுண்டரி எல்லையில் இருக்கும். அந்த ஸ்கொயர் கட் ஷாட்டிற்கு கிரிக்கெட் உலகமே அடிமையாய் இருந்தது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அனைத்து போட்டியிலும் (இறுதிப் போட்டியைத் தவிர) முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து எதிரணி பவுலர்களை வரவேற்றார்.

அதன்பிறகு வயது காரணமாக ஓய்வை அறிவித்தார். இந்த 'சுல்தான் ஆஃப் முல்தான்' விட்டுச்சென்ற இடம் இப்போதும், எப்போதும் காலியாகவே இருக்கிறது இருக்கும்.

சேவாக்

ஓய்வுபெற்றாலும் இவரது ட்வீட்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இவரைப் பின்தொடர்ந்துவருகிறது.

2. ஜாகீர் கான் (2000 to 2014)

உலகக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் சொன்ன வார்த்தைகள் இது, "எங்களுக்கு ஒவ்வொரு தெருவிலிருந்தும் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்'' ஆனால் இந்தியாவில் அதுபோன்ற நிலை இல்லை. இந்திய கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்துவீச்சாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணினால் முதலில் வரும் பெயர் ஜாகீர் கான். வாசிம் அக்ரமை கண்டு பொறாமை கொண்டிருந்த இந்தியர்களுக்கு, வரமாக வந்தவர்தான் ஜாகீர் கான்.

இவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கின் விக்கெட்டை யார்க்கர் கொண்டு வீழ்த்தியதை இப்போது பார்த்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு goosebumb moment தான். சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மட்டுமே தயார் செய்யப்படும் இந்திய மைதானங்களில், விக்கெட் வேட்டை நடத்தினார். இன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு உலக பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கிறது என்றால், அதற்கு விதை ஜாகீர் கான் போட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே ஏற்படும் காயங்களால் தான் ஜாகீர் கான் ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டது. ஆனால் இன்றும் இவர் ஓடிவந்து பந்துவீசுகையில் செய்யும் ஜம்ப், ஒவ்வொரு தெருவிலும் பார்க்கலாம்.

ஜாகீர் கான்

3. ராகுல் டிராவிட் (1996 to 2012)

கிரிக்கெட்டிலேயே மிகவும் கடினமான பணி என்னவென்று கேட்டால், டெஸ்ட் போட்டிகளில் மூன்றாமிடத்தில் களமிறங்குவதுதான். அதனை தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் நேரத்தியாக விளையாடிக் காட்டிய சிங்கம்தான் ராகுல் டிராவிட். உலகக்கோப்பைக்கு பிறகு இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வீரர்களை உலக சாம்பியன் என்றும் பார்க்காமல் இங்கிலாந்து அணி புரட்டிப்போட்டு அடித்தது. ஆனால் டிராவிட்டை மட்டும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து மைதானங்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

தொடக்க வீரராக களமிறங்கி, டிராவிட் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது. அதையடுத்து 10 நிமிடங்களில் டிராவிட் மைதானத்திற்குள் மீண்டும் களம் புகுந்தார். அதனைப் பார்த்த ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. ஓய்வுபெற்றதையடுத்து ஓய்வை அனுபவிக்காமல், எதிர்கால இந்திய அணியை தயார்செய்ய புறப்பட்டதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல், ஹர்திக், மயாங்க், ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த், சுப்மன் கில் என அனைவரும் டிராவிட்டின் பிள்ளைகள்தான். டிராவிட்டைப் பற்றி வர்ணனையாளர் ஹட்ஷா போக்லே கூறிய வார்த்தைகள் இவை:

ராகுல் டிராவிட்

'ask him to walk on water and he will ask, How many kilometers?' இதுதான் ராகுல் டிராவிட். தன் அணிக்காக தன்னலம் பார்க்காமல் இறுதிவரை உயிரைக் கொடுத்து ஆடிய ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையை, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து முடிவுக்கு கொண்டுவந்தார்.

4. வி.வி.எஸ். லக்‌ஷ்மண் (1996 to 2012)

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாம் இடத்தில் களமிறங்குவது பெரும்பாலும் தொடக்க வீரராக களமிறங்குவதற்கு சமம். ஏனென்றால், ஆறாவது வீரராக களமிறங்குபவர்கள் அதிகமாகப் புதிய பந்துகளைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் ஆறாவது வீரரின் பணி மிக முக்கியமானது. அதனை சீறும் சிறப்புமாகச் செம்மையாக ஆடிக்கொடுத்தவர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண். கடந்த 25 ஆண்டுகளில் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்னவென்று ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு பட்டியலின் முதல் இடத்தில் இருந்தது... கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் லக்‌ஷ்மண் அடித்த 281 ரன்கள்தான்.

விவிஎஸ் லக்‌ஷ்மண்

டெஸ்ட் போட்டிகளில் எப்படிப்பட்ட பந்தை அடிக்க வேண்டும், எப்படிப்பட்ட பந்தை அடிக்கக் கூடாது என இவரது ஆட்டத்தைப் பார்த்து பாடமே எடுக்கலாம். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் லக்‌ஷ்மண் விக்கெட்டை வீழ்த்துவதற்குள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு குதிரை கொம்பாகிவிடும்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியர்களின் கனவை நொறுக்கியதில் லக்‌ஷ்மணுக்கு தனி இடமே உண்டு. இவர் ஓய்வுபெற்ற பின், இவரது இடத்திற்கு வந்த ரோஹித் ஷர்மா, விஹாரி, சாஹா என நிறைய பரிசோதனை முயற்சிகள் நடந்தாலும், இன்றுவரை லக்‌ஷ்மண் இடம் அப்படியேதான் உள்ளது.

5. யுவராஜ் சிங் (2000 to 2017)

2000 முதல் 2008 வரையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு இந்திய அணியில் யுரவாஜ் சிங் ஒருவரால்தான் முடிந்தது. தனது இருப்பை உலகுக்கு பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத்தான். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அடித்த 81 ரன், அப்போது அடித்த ஜான்டி ரோட்ஸ் வகை ரன் அவுட் என யுவராஜ் சிங்கின் ஆட்டம் ஆஸ்திரேலிய வீரர்களைப் போல் ஆதிக்கம் நிறைந்தது. 2007ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடித்த 70 ரன், 2011ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2003ஆம் ஆண்டு தோல்விக்கு பழிதீர்த்தது என யுவராஜ் சிங் குறித்த ஞாபகங்கள் ரசிகர்களுக்குமே பரிட்சயம்தான்.

ஆனால் புற்றுநோயிலிருந்து போராடி இந்திய அணிக்குள் மீண்டும் இடம்பிடித்தது எல்லாம் யாராலும் கனவிலும் நினைக்க முடியாத காரியம். ஆனால் யுவராஜ் சிங் அதனை செய்தார். மிக நீண்ட நாள்களாக டெஸ்ட் போட்டிகளில் லக்‌ஷ்மண் செய்ததை, ஒருநாள், டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் செய்துவந்தவர். இவரைப் போன்ற ஆல்- ரவுண்டரைத் தான் இந்திய அணி மிக நீண்ட நாள்களாகத் தேடிவருகிறது. ஆனால் கண்களில் பட்டவரை யாரும் இவருடைய இடத்தை நிரப்பவில்லை.

யுவராஜ் சிங்

இதையும் படிங்க: மிஸ் யூ ஜெர்சி நம்பர் 12!

6. முகமது கைஃப் (2002 to 2017)

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. மும்பை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து வீரர் ஃபிளிண்டாஃப் தனது டி-ஷர்ட்டைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய கேப்டன் கங்குலிக்கு ஏற்பட்டது.

2002 நாட் வெஸ்ட் சீரியஸ்... இந்தப் பெயர் கேட்டவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் கங்குலி தனது டி-ஷர்ட்டை கழற்றி சுற்றியதுதான். அன்று கங்குலி தனது ட்ரேட்மார்க்கை பதித்தற்கு முக்கியக் காரணம் முகமது கைஃப். 2002இல் இருந்து 2006ஆம் ஆண்டுவரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஆட்டம் காணாமல் இருந்ததற்கு மிக முக்கியக் காரணம். 'ஜான்டி ரோட்ஸ் ஜூனியரா இருப்பான் போல' என இன்றும் பேசவைக்கும் ஃபீல்டிங்கை கண்முன் செய்துகாட்டியவர்.

பாய்ண்ட்டில் யுவராஜ், கவர்ஸில் கைஃப். இதுதான் இந்திய அணியின் ஃபீல்டிங் சுவர். இவர்களின் கைகளுக்கு பந்து சென்றால், பேட்ஸ்மேன் ஒரு ரன் ஓடுவதே சிறிது கஷ்டம்தான். ஏனென்றால் கண்மூடித்திறக்கும் நேரத்தில் நிச்சயம் டேரக்ட் ஹுட் அடிப்பார்கள். இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஒவ்வொரு முறை நியமிக்கப்படும்போதும் கைஃப்பின் ஞாபகம் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகருக்கும் வந்துசெல்வது இயல்புதான். கிரேக் சேப்பல் என்னும் சூனியக்காரரால் இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர், இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக வீரர்களை ஃபீல்டிங் தயார் செய்துகொண்டிருக்கிறார்.

முகமது கைஃப்

7. கவுதம் கம்பீர் (2003 to 2016)

2000ஆம் ஆண்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி எப்படி மக்களின் நம்பிக்கை சம்பாதிக்க வேண்டியிருந்ததோ, அதேபோன்ற நிலைதான் இந்திய அணி 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியபோதும் ஏற்பட்டது. சீனியர்கள் எல்லாம் விலகிக்கொள்ள, தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரைக் கைப்பற்றியது. அதற்கு தலைமை தளபதி யுவராஜ் சிங் என்றால், துணைத் தளபதி கம்பீர்தான். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 75 ரன்களும் 2011 உலகக்கோப்பைத் தொடரில் அடித்த 97 ரன்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எந்நாளும் மறக்க முடியாது.

கம்பீர் - சேவாக் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கியபோதுதான் டிராவிட் கொஞ்சம் நிம்மதியாக கால்களில் பேட் (Pad) கட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு இரு கோப்பைகளைப் பெற்றுக்கொடுத்தது என எல்லாம் கம்பீரின் மாஸ்டர் மைண்ட்டிற்கு கிடைத்த மகுடங்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் வீசும் அதிவேகப்பந்துகளை அலட்டாமல் கிரீஸிலிருந்து இறங்கிவந்து கவர்ஸ் திசையில் அடிக்கப்படும் கம்பீரின் ஷாட்களைப் பார்த்தால் இன்றும் சிலிர்க்கும். ஓய்வுக்கு பிறகு தற்போது பாஜக மக்களவை உறுப்பினராக உள்ள அரசியல்வாதி கம்பீரைக் கடந்து, இன்றும் பேட்ஸ்மேன் கம்பீருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கவுதம் கம்பீர்


8. ஆஷிஸ் நெஹ்ரா (2001 to 2017)

2001ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் இடம்பிடித்து ஜாகீர் கானுடன் போட்டிபோட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் நெஹ்ரா. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முக்கிய வீரர். ஆனால் தொடர் காயங்களால் இந்திய அணிக்குள் உள்ளே, வெளியே என போராடியவர். ஆனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில்தான் தனது திறமையை உலகுக்கு மீண்டும் நிரூபிக்க முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்று விரலில் அடிபட, இருந்தும் அரையிறுதியில் பந்துவீசியதை யாராலும் மறக்க முடியாது. அதையடுத்து ஆடிய 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இவர்தான் முக்கிய பந்துவீச்சாளர். கங்குலியின் கேப்டன்சியில் அறிமுகமாகி, டிராவிட் கேப்டன்சியில் விளையாடி, தோனியின் கேப்டன்சியில் கம் பேக் கொடுத்து, விராட் கோலி கேப்டன்சியில் ஓய்வை அறிவித்தவர்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் பிரச்னை தொடர் காயங்கள்தான். நெஹ்ராவுக்கு ஏற்பட்ட காயங்களால் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாமல்போனது. அதனாலேயே ரசிகர்கள் நெஹ்ராவைக் கொண்டாடத் தவறினார்கள். கிட்டத்தட்ட 17 வருடங்கள் அணியில் இடம்பிடிக்கத் தொடர்ந்து போராடியவர் ஆஷிஸ் நெஹ்ரா. ஓய்வுக்குப் பிறகு தற்போது ஐபிஎல்லில் ஆர்.சி.பி. அணியின் பந்துவீச்சாளர்களைப் பட்டைத் தீட்டிக்கொண்டிருக்கிறார் இந்த இடக்கை வேகப்புயல்.

ஆஷிஸ் நெஹ்ரா

9. சச்சின் டெண்டுல்கர் (1989 to 2013)

'மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்' இந்த வரிக்கு ஏற்ப சச்சின் உலகக் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகளே இல்லை. சச்சினின் கடைசி ஆட்டத்தைப் பார்த்த 90'ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்ல, எல்லா கிட்ஸ்களின் கண்களிலும் கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டியது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒருநாள் ஓய்வுபெறத்தான் போகிறார்கள். ஆனால் இவர் ஓய்வின்போது கிரிக்கெட் உலகமே கலங்கிதான் போனது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின், இந்த ஒரு பெயர் கிரிக்கெட்டர்களுக்கு மட்டுமல்ல சாமானியர்களுக்கும் கொஞ்சம் நெருக்கமானது. ஒவ்வொருவரும் எங்களுக்கு சொந்தம் என்பதுபோல் கொண்டாடப்பட்ட மாவீரர். யாரால் இங்கே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினார்களோ அவர் ஓய்வை அறிவித்ததும், அதன்பின் கிரிக்கெட்டைப் பார்க்காதவர்கள் ஏராளம். கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து ஹாட்ஸ்டார் காலம்வரை கிரிக்கெட் ஆடிய கிரிக்கெட்டின் கடவுள்.

சச்சின் டெண்டுல்கர்

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வீரராக 200 ரன்களை அடித்தது, தனக்கு வேண்டிய உலகக்கோப்பையைத் தானே சதம் விளாசி பிடிக்க ஓடியது, அதே உலகக்கோப்பையை சிறுபிள்ளைப் போல் வாங்கி கொண்டாடியது, சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை விளாசியது, எந்த டி20 வகைப் போட்டிகளுக்கு சரிபட்டு வரமாட்டார் என ஒதுக்கினார்களோ அதே டி20 வகை போட்டிகளில் அதிக ரன்களை விளாசி சதத்தையும் பூர்த்தி செய்தது, கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பிட்ச்சை பார்த்த கண்ணீர் சிந்தியது என இந்த 10 ஆண்டுகளில்தான் சச்சின் தன் ரசிகர்களை அதிகமாக திருப்திப்படுத்திக்கொண்டே இருந்தார்.

ஒவ்வொரு முறை சச்சின் களம்புகும்போதும் சச்சினுக்கு மட்டும்தான் 100 கோடிக்கும் அதிகமான மக்களிடமிருந்தும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பையும், ப்ரஷரையும் 24 வருடங்களாக தனது தலையில் சுமந்த சச்சின், இறுதியாக 200 டெஸ்ட் போட்டியில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையோடுதான் ஓய்வுபெற்றார்.

இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'

ABOUT THE AUTHOR

...view details