தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#HappyBirthdayZaheerKhan: 90ஸ் கிட்ஸ்களின் பவுலிங் ஹீரோ ஜாகிர் கான் ❤ - ஜாகிர் கானின் பிறந்தநாள்

'ஜாகிர் கானின் ஆட்டத்திறனைப் பார்த்தால், சச்சினுக்கு கிடைக்கும் மரியாதை அவருக்கும் கிடைக்க வேண்டும். ஏனெனில், பந்துவீச்சுத் துறையின் சச்சின்தான் ஜாகிர்' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறிப்பிட்டிருக்கிறார்.

Zaheer khan

By

Published : Oct 7, 2019, 5:44 PM IST

கிரிக்கெட் விளையாடும்போதோ, கடைக்குச் செல்லும்போதோ அல்லது வீட்டில் தனியாக இருக்கும் போதோ, 90ஸ் கிட்ஸ்கள் நிச்சயம் ஜாகிர் கானின் பவுலிங் ஆக்ஷனை இமிடேட் செய்யமால் இருந்திருக்க மாட்டார்கள். air-ல் அந்த சில மணித்துளிகள் பந்தை ஒருகையில் வைத்துக்கொண்டு போஸ் தரும், அவரது அந்த பவுலிங் ஆக்ஷன் தான், 90ஸ் கிட்ஸ்களை மிகவும் கவரச் செய்தது.

அப்போதைய காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் பவுலிங்கில் அவர்களுக்குப் பிடித்த ஃபேவரைட் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தான்.

ஜாகிரின் பவுலிங் ஆக்ஷன்

கிரிக்கெட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் மட்டுமே இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அதுவும் இந்தியாவில் இடதுகை பந்துவீச்சாளர் கிடைப்பதெல்லாம் அரிதினும் அரிது. 1980, 90 ஆகிய காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரமிற்குப் பிறகு 2000ஆம் ஆண்டின் தொடக்கத்திலும், பிற்பாதியிலும் சிறந்த இடதுகைப் பந்துவீச்சாளராக தன்னை நிலைநாட்டிகொண்டவர் ஜாகிர் கான்.

கங்குலியின் கேப்டன்ஷிப்பில் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் நுழைந்ததைப்போலதான் ஜாகிர் கானும் நுழைந்து, குறுகியக் காலத்திலேயே பந்துவீச்சில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். அவருடன் இருந்த அந்தத் துடிப்பு இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.

தாதாவுடன் ஜாகிர் கான்

வாசிம் அக்ரமைப் போல இவர் பந்தை அதிகம் ஸ்விங் செய்யவில்லை என்றாலும், இவருக்கென தனி ரூட்டில் பயணித்தார். அவரிடம் புதிய பந்தைக் கொடுத்தாலும், விக்கெட் எடுப்பார். அதேசமயம் பந்தின் ஷைனிங் தேய்ந்த பிறகும் தனது ரிவர்ஸ் ஸ்விங்கினாலும், சொல்லி வைத்ததைப் போல விக்கெட்டை தூக்குவார். ரிவர்ஸ் ஸ்விங்கின் மாஸ்டர் என்றே ஜாகிர் கானை அழைக்கலாம். இந்திய மண் என்றில்லாமல், அந்நிய மண் என எந்த மண்ணாக இருந்தாலும் இவர் கை சொல்வதை பந்து கேட்கும்.

பொதுவாக, கிரிக்கெட்டில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களிடம் அதிகமுறை அவுட் ஆவார்கள். அந்தவகையில், தென் ஆப்பிரிக்க அணியின் அப்போதைய கேப்டன் கிரேம் ஸ்மித், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸ் ஆகியோரது விக்கெட்டை ஜாகிர் கான் பலமுறை சொல்லி வைத்தைப்போல எடுத்துள்ளார்.

ஸ்மித்தின் விக்கெட்டை சொல்லி வைத்தாற்போல் தூக்கிய ஜாகிர் கான்

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தலை சிறந்த பந்துவீச்சாளராகத் திகழும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜேம் ஆண்டர்சன், ரிவர்ஸ் ஸ்விங் உத்தியை ஜாகிர் கானிடமிருந்துதான் கற்றுகொண்டார். ஜாகிர் கான் உதவியால் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றதில் மிக முக்கியமான ஒன்று 2007 நாட்வெஸ்ட் டெஸ்ட் தொடர் வெற்றிதான்.

அந்தத் தொடரில்தான் ஜாகிர் கான் சொல்லிவைத்தைப் போல ரிவர்ஸ் ஸ்விங் செய்து இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை அசால்ட்டாக கைப்பற்றினார். பொதுவாக, ஜாகிர் கான் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்களுக்குத் தெரியாதவாறு, பந்தை வலதுகையில் மறைத்து வைத்து ஓடி வருவார். அதன்பிறகு, அவர் எகிறி குதிக்கும்போது பந்தை வலது கையிலிருந்து இடதுகைக்கு மாற்றிக் கொண்டு பந்தை வீசுவார்.

ஜாகிர் கான்

அவர் அப்படி செய்வதால், அவர் எந்த மாதிரியான பந்துகளை (இன் ஸ்விங், அவுட் இன்ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங்) வீசுகிறார் என்பதை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாது. அதிலும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள முடியாமல் வரிசைக் கட்டி அவுட்டாகியுள்ளனர். இந்த உத்தியை, தானும் பின் நாட்களில்(2007 நாட்வெஸ்ட் தொடருக்குப் பிறகு)பயன்படுத்திக்கொண்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சனே தெரிவித்துள்ளார்.

கங்குலி எந்த அளவிற்கு ஜாகிர் கானைப் பயன்படுத்திகொண்டாரோ அதே அளவில் டிராவிட், தோனி ஆகியோரும் ஜாகிர் கானை பயன்படுத்திகொண்டனர். இதனால், தான் அவர்களது கேப்டன்ஷிப்பும் நன்கு அமைந்தது. பேட்டிங்கில் சச்சின், சேவாக் ஆகியோர் எப்படி அணிக்கு நல்ல ஓபனிங் தந்தார்களோ, அதுபோல பவுலிங்கில் சூப்பரான ஓபனிங் தந்தவர் ஜாகிர் கான்.

தோனியுடன் ஜாகிர் கான்

"ஜாகிர் கானின் ஆட்டத்திறனைப் பார்த்தால், சச்சினுக்கு கிடைக்கும் மரியாதை அவருக்கும் கிடைக்க வேண்டும். ஏனெனில், எங்களது பந்துவீச்சுத் துறையின் சச்சின் அவர்" என்று தோனி புகழாரம் சூட்டியுள்ளார். ஓபனிங்கில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டுமென்றாலும் சரி, கடைசிக் கட்ட ஓவர்களில் ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டும் என்றாலும், பந்து ஜாகிர் கானிடம் தான் ஒப்படைக்கப்படும். அந்த அளவிற்கு நம்பிக்கையான பந்துவீச்சாளர் ஜாகிர் கான்.

இவரது சமகாலத்தில் ஆர்.பி சிங், இர்பான் பதான், பிரவின் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோர் இருந்தாலும், டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்து ஃபார்மெட்டுகளிலும் இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக இருந்தார். ஜாகிர் கான் பவுலிங்கில் மட்டுமில்ல சில சமயங்களில் பேட்டிங்கிலும் மேஜிக் செய்து இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். குறிப்பாக, 2006 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முரளி கார்த்திக்குடன் பார்ட்னர்ஷிப் வைத்து இந்திய அணியை த்ரில்லாக வெற்றி பெறச்செய்தார்.

2003 உலகக்கோப்பையில் ஜாகிர் கான்

பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களால் 2003, 2011 உலகக்கோப்பை தொடர்களை மறக்க முடியாது. ஏனெனில், ஒரு உலகக்கோப்பை (2003) சோகத்தை தந்தது, மற்றொரு உலகக்கோப்பை (2011) ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் தந்தது. அப்படி அந்த இரண்டையும் தனது பந்து வீச்சினால் ரசிகர்களுக்கு தந்தவர் ஜாகிர் கான்.

2003 உலகக்கோப்பைத் தொடரில் மிகவும் துடிப்போடும் வேகத்துடன் இருந்த இவர், லீக் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மிகவும் சொதப்பினார். அதேசமயம், 2011 உலகக்கோப்பையின் போது அவரிடம் துடிப்பும் வேகமும் இல்லை என்றாலும் அனுபவம் கையில் இருந்தது. அந்த அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியை உலகக்கோப்பையை வெல்லச் செய்தார்.

உலகக்கோப்பையுடன் சேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், யூசஃப் பதான்

ஜாகிர் கான் ஓய்வுபெற்றபிறகு இன்று வரையிலும் இடது கைப்பந்துவீச்சில் கொண்டாடக்கூடிய அளவில் இந்திய அணியில் பவுலர்கள் யாரும் இல்லை. இதனால்தான் என்னமோ இந்திய அணி 2015 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராஃபி ஆகியத் தொடர்களில் தோல்வியடைந்தது.

இடது கை பந்துவீச்சாளர்கள் பொதுவாக வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அச்சுறுத்தலைத் தருவார்கள். அந்த வகையில், 2015, 2017 ஆகிய தொடர்களில் அதுவரை இடதுகை பந்துவீச்சாளர்களை சந்திக்காத இந்திய அணி, 2015 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், 2017 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் இடது கை பந்துவீச்சாளர்களிடம் சரண் அடைந்தது.

2011 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஜாகிர் கான் (21)

ஜாகிர் கான் ஓய்வு பெறுவதற்கு முன்பு பலமுறை அவர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி, மீண்டும் அணியில் திரும்பினாலும் அவருக்கான இடம் அங்கேயேதான் இருந்தது. தற்போதுகூட அந்த இடம் அங்கேயேதான் இருக்கிறது. அந்த இடத்துக்கு பொருத்தமானவரை இந்திய அணி தேர்வுக்குழுவினர் கூடிய விரைவில் தேர்ந்தெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 90ஸ் கிட்ஸ்களின் பவுலிங் ஹீரோ ஜாகிருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

ABOUT THE AUTHOR

...view details