இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் பெயரைக் கேட்டாலே 2007 டி20 உலகக்கோப்பையில் அவர் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை அடித்ததுதான் இந்திய ரசிகர்களுக்கு நினைவில் வரும். அத்துடன் ஸ்டூவர்ட் பிராடின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது என பலரும் நினைத்தனர்.
ஆனால், அச்சம்பவத்திற்குப் பிறகு அவர் இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்தார். சொந்த மண், அன்னிய மண் என அனைத்து நாடுகளிலும் இவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருந்து வருகிறது.
அண்மையில் மான்செஸ்டரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, மெக்ராத், கார்ட்னி வால்ஷ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரருக்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
இதுமட்டுமின்றி டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வேகப்பந்துவீச்சாளர், இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனைகளையும் அவர் படைத்தார். இச்சாதனைகளைப் படைத்த அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்டூவர்ட் பிராடின் சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மனமாரப் பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "ஸ்டூவர்ட் பிராடைப் பற்றி நான் எப்போது எழுதினாலும் ரசிகர்கள் அவரது பந்துவீச்சில் நான் 6 சிக்சர்களை அடித்ததுடன் தொடர்புப்படுத்தி பேசுகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த அவரை இப்போது பாராட்டுமாறு எனது ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி தேவை. பிராட் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் தலைவணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.