நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
181 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா, 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் தோன்றியது.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரளச்செய்தனர்.
அதிலும் ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என பாரபட்சம் பார்க்காமல் பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் சிக்சர் அடித்து கடந்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பந்த், ஆண்டர்சன் பந்துவீச்சில் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தரும் தனது மூன்றாவது அரைசதத்தைக் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நாளை நாடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி 89 ரன்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டி20: ஃபின்ச் அதிரடியில் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா!