இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15 முதல் 19ஆம் தேதிவரை பிரிஸ்பேனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சிட்னியில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால், அங்கிருந்து பிரிஸ்பேன் வருபவர்கள், கூடுதலாக சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், வீரர்கள் தங்கியிருக்கும் தளத்தை விட்டு வேறு பகுதிக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல மறுத்துள்ளனர். இதற்காக முகக்கவசம் அணியாமல் சிட்னி மைதானத்துக்கு வந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார் ரவி சாஸ்திரி. இந்திய அணி கேப்டன் ரஹானேவும், பிரிஸ்பேன் செல்வது குறித்த உறுதியான தகவலைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதனால் இருநாட்டு கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களும் காணொலி கூட்டரங்கு வாயிலாக, வீரர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆனால் தற்போது கரோனா பரவல் காரணமாக பிரிஸ்பேனில் மூன்று நாள் ஊரடங்கு அமல்படுத்தி குயின்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், "அடுத்த வாரம் கபாவில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பிரிஸ்பேனில் மூன்று நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து தீர்மானிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள் அவசரமாக முயற்சித்து வருகின்றனர். ஏனெனில் கடுமையான கட்டுப்பாடுகளில் இந்திய அணி விளையாட மறுப்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதனைச் செய்துவருகிறது.
இந்நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் தொடருக்காக வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த விடுதியின் தொழிலாளி ஒருவருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனல் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது" என அதில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை காண 36,000 பார்வையாளர்களை அனுமதிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இப்போட்டி பார்வையாளர்களின்றி நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்ட்: ஜடேஜா சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா!