நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், ரன் ஏதுமின்றியும், அபித் அலி 25 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அசார் அலி அசத்தல்
பின்னர் களமிறங்கிய அசார் அலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட, மறுமுனையில் களமிறங்கிய ஹாரிஸ் சோஹைல், ஃபவாத் ஆலம் ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
அதன்பின் அசார் அலியுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அணிக்கு உதவினர்.
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அசார் அலி 93 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வானும் 61 ரன்களில் நடையைக் கட்டினார்.
நியூ., வேகத்தில் சுருண்ட பாக்.
அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ஃபஹீம் அஷ்ரஃப் விக்கெட்டை நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜெமிசன் கைப்பற்றியதன் மூலம் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனால் ,83.5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டாகி 297 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசார் அலி 93 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் ஐந்து விக்கெட்டுகளையும், சவுதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் : முதல் வெற்றியை எதிர்நோக்கிய பயணத்தில் ஒடிசா , ஈஸ்ட் பெங்கால்!