இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஹம்பன்டோட்டாவில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றிருந்தது. இதனால், இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் அபிஷ்கா ஃபெர்ணான்டோ (127), குசால் மெண்டிஸ் (119) ஆகியோரது சதத்தால், இலங்கை அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 345 ரன்களைக் குவித்தது. இதில், இலங்கை வீரர்கள் ஒரு சிக்சரையும் அடிக்காதது ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. இப்போட்டியில் இலங்கை வீரர்கள் 33 பவுண்டரிகளை அடித்தனர்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிஷ்கா ஃபெர்ணான்டோ - குசால் மெண்டிஸ் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 239 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மூன்றாவது விக்கெட்டுக்கு அதிக ரன்களைச் சேர்ப்பது இதுவே முதல்முறையாகும். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷெல்டான் காட்ரெல் நான்கு, அல்சாரி ஜோசஃப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.