ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய வார்னர் - ஜோ பர்ன்ஸ் ஆகியோர் அட்டகாசமான தொடக்கத்தை அளித்தனர்.
இந்த இணை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. ஒருபுறம் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் தனது 22ஆவது சதத்தை நிறைவு செய்து மீண்டும் கம் பேக் அளித்தார். மறுபுறம் ஜே பர்ன்ஸும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்திருந்தது.
பின்னர் வந்த மார்னஸ் லபுசாக்னேவும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 312 ரன்களை குவித்துள்ளது. வார்னர் 151 ரன்களுடனும், லபுசாக்னே 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதனிடையே இரண்டாம் நாள் ஆட்டம் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் வார்னர் 56 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் அணியில் அறிமுகமான 16 வயதே நிரம்பிய இளம் வீரர் நசீன் ஷாவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த பந்து நோபால் என்று அறிவிக்கப்பட்டதால் வார்னர் மீண்டும் பேட்டிங் செய்யத் தொடங்கினார்.
இதனிடையே இந்த போட்டியை ஒளிபரப்பும் தனியார் சேனலில் உள்ள கிரிக்கெட் நிபுணரும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான ட்ரெண்ட் கோப்லேண்ட் ஐசிசிக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியை கூறியுள்ளார். அவர் ஆஸ்திரலியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் 21 நோபால்கள் வீசப்பட்டதாகவும், அதை நடுவர்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இது ஐசிசிக்கு மிகப்பெரிய பிரச்னை என்றும் தெரிவித்தார்.
பேட் கம்மின்ஸ் வீசிய சர்ச்சைக்குரிய பந்து
முன்னதாக முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் விளையாடியபோது அந்த அணியின் மொகம்மது ரிஸ்வான், பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தது பெரும் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. காரணம் பேட் கம்மின்ஸ் வீசிய அந்த பந்து நோபால் என்று தெளியாக தெரிந்த பின்னும் மூன்றாவது நடுவர் பாகிஸ்தான் வீரரை அவுட் என்று அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் அதே போட்டியில் 21 நோபால்கள் வீசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது நடுவர்களின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது.