ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான மகளிர் உலகக் கோப்பை தொடர் 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ளது. அதற்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்தில் பிப்.6ஆம் தேதி தொடங்கி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கவுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்த மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இல்லாமல் இருந்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் 2021ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பைத் தொடர் நியூசிலாந்தில் நடப்பது பற்றி அந்த அணியின் கேப்டன் சோஃபி டெவின் பேசுகையில், ''வலிமையான அணிகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ளப்போவது சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது'' என்றார்.
இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகையை 5.5 மில்லியன் நியூசிலாந்து டாலர்களாக ஐசிசி அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு பின் மகளிர் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடர் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ரசிகர்கள் இல்லாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி!