1983ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இந்திய ரசிகர்களைக் காட்டிலும் சச்சினுக்கு நீண்ட ஆண்டுகளாக இருந்தது. அதுவரை தான் பங்கேற்ற ஐந்து உலகக் கோப்பை தொடரில் நிறைவேறாத அந்தக் கனவு, 2011ஆம் ஆண்டில் தனது ஆறாவது உலகக் கோப்பையில் அதுவும் சொந்த மண்ணிலேயே நிறைவேறியது.
இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் கோலி, யூசஃப் பதான், ரெய்னா உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் தங்களது தோளில் சச்சினை சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். சச்சினுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் இந்தத் தருணம் நெகிழ்ச்சியடைய செய்தது. இதனால், 20 ஆண்டுகளில் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான லாரஸ் விருதின் இறுதிப் பட்டியலில் சச்சினின் பெயர் இடம்பெற்றிருந்து.
பிப்ரவரி 16ஆம் தேதி வரை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த விருதின் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 17ஆம் தேதி பெர்லினில் நடைபெறும் விழாவில் இதன் வெற்றியாளர் குறித்த விவரமும் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இந்த லாரஸ் விருதில் இடம்பெற்ற சச்சினுக்கு வாக்களிக்குமாறு கேப்டன் கோலி, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டனர்.