ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், இன்றளவும் அவரது பவுலிங்கைப் பார்த்து சிலாகிக்காத ரசிகர்களே இருக்கமாட்டார்கள். ஒரு லெக் ஸ்பின்னரால் பந்தை இந்த அளவிற்கு சுழல வைக்க முடியுமா என்ற அளவில் அவரது பந்துவீச்சு இருந்ததே அதற்கு முக்கிய காரணம்.
2005ஆம் ஆண்டில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஒயிடாக வீசிய அவரது பந்தில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூவ் ஸ்டிராஸ் போல்ட் ஆகியிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஆண்ட்ரூவ் ஸ்டிராஸுக்கு முன்னரே அந்த மேஜிக்கை பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த தொடக்க வீரரான சையத் அன்வரிடம் வெளிப்படுத்திருப்பார், வார்னே.
1999இல் பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், இவ்விரு அணிகளுக்கிடையே ஹோபார்ட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில்தான் வார்னேவின் மேஜிக்கில் அன்வர் அவுட்டானர். பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் சையத் அன்வர் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 48ஆவது ஓவரில் ஷேன் வார்னே வீசிய லெக் பிரேக்கர், ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் ஆகி லெக் ஸ்டெம்பை தாக்கியது.