தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே) டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இப்போட்டியில் நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தை தென் ஆபிரிக்க அணியின் பாப் டூ பிளேசிஸ் 55 ரன்களுடனும், டெம்பா பவுமா 41 தொடங்கினர். இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின்னர் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெம்பா பவுமா விஸ்வா ஃபெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த முல்டரும் 36 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதற்கிடையில் பாப் டூ பிளேசிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஒன்பதாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் டூ பிளேசிஸுடன் ஜோடி சேர்ந்த கேசவ் மகாராஜ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது மட்டுமல்லாமல், அரைசதத்தையும் கடந்தார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாப் டூ பிளேசிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்வார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டபோது, 199 ரன்களில் ஹசரங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கியவர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 621 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பாப் டூ பிளேசிஸ் 199 ரன்களை எடுத்தார். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 10 ரன்களிலும், குசால் மெண்டிஸ் ரன் ஏதுமின்றியும் இங்கிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த குசால் பெரேரா - சண்டிமால் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி தரப்பில் குசால் பெரேரா 33 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இதையும் படிங்க:சிறந்த வீரருக்கான விருது கோலிக்கு, 'ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' தோனிக்கு!