கிரிக்கெட்டில் பல பந்துவீச்சாளர்கள் மத்தியில் தனித்து தெரிபவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த இவர், தனது வித்தியாசமான பவுலிங் முறையினாலும், பல்வேறு சாதனைகளைப் படைத்து தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக திகழ்கிறார். முதல் ஓவர், கடைசி ஓவர் என எந்த ஓவர்களிலும் இவர் வீசப்படும் யார்க்கர் பந்துகளுக்கு அவுட்டாகாத பேட்ஸ்மேன்களே இல்லை. அப்படி, பலமுறை தனது பந்துவீச்சினால் ஸ்டெம்புகளையும், பேட்ஸ்மேன்களின் கால்களையும் பதம் பார்த்த இவர், தற்போது ஓய்வுபெறும் தருணத்தில் உள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த மலிங்கா 2.0!
இலங்கையைச் சேர்ந்த 17 வயது இளம் பந்துவீச்சாளர், மலிங்காவின் ஜெராக்ஸ் காப்பிபோல் பந்துவீசும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இதனால், மலிங்காவின் வெற்றிடத்தை இலங்கை அணியில் யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏற்கனவே, இலங்கை அணியில் ஜெயவர்தனே, குமார் சங்ககரா, தில்ஷான் ஆகியோரது வெற்றிடத்தை தற்போதைய வீரர்கள் நிரப்பாததால், இலங்கை அணி மோசமான ஃபார்மில் உள்ளது. இந்த நிலையில், மலிங்காவின் ரிப்ளேஸ்மேன்டாக 17 வயது இளம் வீரர் மதீஷா பதிரானா இருப்பார் என தெரிகிறது. ஏனெனில், இவரது பவுலிங் ஸ்டைல், வீசும் யார்க்கர் பந்துகள் அனைத்தும் மலிங்காவின் ஜெராக்ஸ் காப்பி போலவே இருக்கிறது.
ட்ரினிட்டி அணிக்காக விளையாடிவரும் இவர், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் ஏழு ரன்கள் மட்டுமே வழங்கி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பல்வேறு ரசிகர்களும் இலங்கை அணியில் அடுத்த மலிங்கா உருவாகிவருகிறார் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த மலிங்கா 2.0 (மதீஷா பதிரானா)வுக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.