இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் என்றழைக்கப்படும் மித்தாலி ராஜ், சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, இந்திய மகளிர் அணி தனது சொந்த மண்ணில் ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது.
இதில், டி20 தொடரில் விளையாடவுள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் குழுவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், மித்தாலி ராஜ் ஓய்வுபெற்றதால் அவருக்கு பதிலாக 15 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், நாகாலாந்து அணிக்கு எதிரான உள்ளூர் டி20 போட்டியில் 56 பந்துகளில் 128 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, மகளிர் அணிகளுக்கான டி20 சேலன்ஞ் தொடரில் அவர் மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளுக்கான மகளிர் அணி விவரம்:ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தானா, ஜெமியா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, தானியா பாட்டியா, பூனம் யாதவ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூஜா , ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல், அனுஜா படேல், ஷஃபாலி வர்மா, மான்சி ஜோஷி
இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சூரத் நகரில் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.