வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவருகிறது. இதில், இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி செயின்ட் லூஸியாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக 15 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இவ்விரு வீராங்கனைகளும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்த நிலையில், ஷஃபாலி வர்மா 73 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும்.
ஸ்மிருதி மந்தானா - ஷஃபாலி வர்மா இணை இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை சேர்த்த இந்திய மகளிர் ஜோடி என்ற சாதனையை ஷஃபாலி வர்மா - ஸ்மிருத்தி மந்தானா இணை படைத்தது. மறுமுனையில், சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 67 ரன்களில் ஆவுட்டாக, இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய பந்துவீச்சில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.