தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2019, 7:46 PM IST

Updated : Sep 24, 2019, 8:05 PM IST

ETV Bharat / sports

#OnThisDay: ஒருவேளை ஸ்ரீசாந்த் அந்த கேட்சை விட்டிருந்தால்..?

இந்திய அணி இன்னும் எத்தனை உலகக்கோப்பைகளை வென்றாலும், 2007 டி20 உலகக்கோப்பை எப்பொழுதும் ஸ்பெஷல்தான். இந்த உலகக்கோப்பையிலிருந்து எழுதப்பட்ட புது அத்தியாயத்திலிருந்துதான் இந்திய அணி தற்போதைய தனது கிரிக்கெட் புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

2007 t20 worldCup

பொதுவாக, ரொம்ப எதிர்பார்க்கிறது கிடைக்காம போனா யாரா இருந்தாலும் ஏமாற்றமும் வருத்தமும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும். அப்படி, கிரிக்கெட்டை மதமாக பார்க்கும் ஒட்டுமொத்த இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்தது 2007 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரைத்தான்.

ஆனால், இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் அந்த எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்ததுதான் மிச்சம். அதுவே எதிர்பார்ப்பு அதிகமாக இல்லாத நேரத்தில் கிடைக்கிற சில விஷயங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். அப்படிதான் இந்திய அணியின் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் வெற்றியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த ஆல் டைம் ஃபேவரைட் மொமண்ட்!

வெற்றிபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள்

முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றோடு நடையைக் கட்டிய இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

இதனால், இந்தத் தொடர் இரண்டு அணிகளின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றியமைத்தது. மேற்கூறியதை போலவே எதிர்பார்க்காத சில விஷயங்கள் நம்மை ஏமாற்றாமல் நடந்தால் அது நமது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்யும். செப்டம்பர் 24, 2007இல் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்தப் போட்டியை எதிர்பார்த்துதான் இருந்தனர்.

இந்தியா - பாக்.

பயிற்சியாளரே இல்லாமல் கலந்துகொண்ட இந்திய அணியை நீள முடியுடன் தோனி வழிநடத்தினார். சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் ஆகியோர் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும்கூட இந்த ஃபார்மெட் அவர்களுக்கு புதிது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களின் வயது ஆவரேஜ் இந்தத் தொடரில் 27தான்.

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுக்க இந்திய அணியில் உத்தப்பா, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் கையை விரித்தனர். இருப்பினும், மறுமுனையில் போராடிய கவுதம் கம்பிர் 75 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 157 ரன்கள் என்ற கௌரவ ஸ்கோரை எடுத்தது.

கவுதம் கம்பிர்

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோஹைல் தன்வீர் வீசிய 20ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை, ரோகித் ஷர்மா லாங் ஆன் திசை நோக்கி அடித்தார். அப்போது ஃபீல்டிங் செய்திருந்த முகமது ஹஃபிஸ் அந்த கேட்சை விட்டதால், அது சிக்சருக்கு சென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் எப்படி ஒரு ரன் அவுட்டை சுற்றியே இறுதிப் போட்டி தீர்மானிக்கப்பட்டதோ அதுபோல இந்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியையும் ரோகித் ஷர்மாவின் சிக்சர்தான் தீர்மானித்தது.

இதனையடுத்து 158 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு பந்துகளில் ஆறு ரன்கள் தேவை. முன்னதாக, அதே ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது, ஜோகிந்தர் ஷர்மா முதல் பந்தை ஒயிடாக வீசினார்.

பின்னர் இரண்டாவது பந்தை மிஸ்பா ஸ்ட்ரைட் திசையில் சிக்சருக்கு அனுப்பினார். தற்போது ஒரு ஹிட் அடித்தால் பாகிஸ்தானுக்கு கோப்பை. அதேபோல் பாகிஸ்தானின் ஒரு விக்கெட் எடுத்தால் இந்தியாவுக்கு கோப்பை. இப்படிப்பட்ட சூழல் போட்டியை பார்த்த அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற டென்ஷன் எகிறியது.

ஸ்ரீசாந்த்

இந்த சூழலில் ஜோகிந்தர் ஷர்மா வீசிய ஸ்லோயர் பந்தை மிஸ்பா ஸ்கூப் ஷாட் ஆட, பந்து மேல்நோக்கி சென்றவுடன் சிக்சர்தான் என இந்திய ரசிகர்கள் நினைத்த போது, கமெண்ட்ரியில் ரவிசாஸ்திரி In the air Sreesanth takes it என்று சொல்ல, மைதானங்களிலும், இந்தியாவிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன. குறிப்பிட்ட ஒரு வீரரால் இந்த வெற்றி சாத்தியப்படவில்லை ஒட்டுமொத்த அணியின் உழைப்பும் உலகக்கோப்பையை அறுவடை செய்தது.

முதல் கேப்டன்ஷிப்பில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தோனி

ஸ்ரீசாந்த் மட்டும் அந்த கேட்ச்சை விட்டிருந்தால் நான் மைதானத்திலேயே அவரை அடித்திருப்பேன் என ஹர்பஜன் ஒரு சில வருடங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஒருவேளை அவர் அந்த கேட்சை விட்டிருந்தால்... நிச்சயம் இந்தியாவின் வரலாறு மட்டுமின்றி தோனியின் வரலாறும் மாறியிருக்கும்.

இப்படிப்பட்ட த்ரில் போட்டியை இந்திய ரசிகர்கள் பெரிதாக விரும்பியதால்தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஹிட்டாகியும் இருக்கிறது. தோனி என்னும் கேப்டனின் முதல் அத்தியாயம் இந்த இறுதிப் போட்டியிலிருந்துதான் எழுத ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக தோனி வலம்வருவார் என கவுதம் கம்பிர் அந்தத் தொடர் முடிவு பெற்றபோது கூறியிருந்தார்.

டி20 சாம்பியன்ஸ்

இந்திய அணி இன்னும் எத்தனை உலகக்கோப்பைகளை வென்றாலும், 2007 டி20 உலகக்கோப்பை எப்போதும் ஸ்பெஷலானது. இந்த உலகக்கோப்பையிலிருந்து எழுதப்பட்ட புது அத்தியாயத்திலிருந்துதான் இந்திய அணி தற்போதைய தனது கிரிக்கெட் புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

Last Updated : Sep 24, 2019, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details