லண்டன்: 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளது. 1900ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2028ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட், பேஸ்பால், ஃபிளக் புட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் குழு அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது. மேலும், இது குறித்து அடுத்த வாரம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் கிரேக் பார்க்லே கூறிகையில்; "2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் பரிந்துரைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான இறுதி முடிவு வரும் வாரங்களில் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்றார்.
2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டுகளின் முதற்கட்ட பட்டியலை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கிரிக்கெட் இடம் பெறவில்லை என்றாலும், கடந்த ஜூலை மாதம் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டிய விளையாட்டு பட்டியலில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது.