அகமதாபாத்: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் 31 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் 14 லீக் ஆட்டங்களே மீதம் உள்ளது. இத்தொடரில் தொடக்க முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதன் மூலம் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், வர இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியதாவது; "அகமாதாபாத்தில் கோல்ப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பெரிய காயம் இல்லை என்றாலும், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் அல்லது கேமரூன் கிரீன் அணியில் சேர்க்கப்படலாம். ஆனால் அது குறித்து முடிவு இதுவரையில் எடுக்கப்படவில்லை" என்றார்.
கிளென் மேக்ஸ்வெல் இந்த தொடரில் 196 ரன்கள் அடித்துள்ளார். குறிப்பாக அவர் நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் 100 ரன்கள் விளாசி உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் இல்லாதது, ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க:David Willey: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வை அறிவித்த டேவிட் வில்லி!