லண்டன்:இந்திய அணி 1 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளை விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 2021-22 டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்த நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தனதாக்கியது.
இதைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்டர்களை, பும்ரா - ஷமி கூட்டணி தங்களது ஸ்விங், ஸீம் வேரியேஷனில் கதிகலங்கச் செய்தது.
ஆட்டம் கண்ட இங்கிலாந்து ஓப்பனிங்: ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகியோர் பும்ரா பந்துவீச்சிலும், பென் ஸ்டோக்ஸ் ஷமியிடமும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இம்மூவரும் டக் அவுட்டான நிலையில், பேர்ஸ்டோவ் 7 ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டனும் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
இங்கிலாந்து 7.5 ஓவர்களில் 26/5 என்று தத்தளித்தது. கேப்டன் பட்லர் ஒருமுனையில் நின்று விளையாட, மறுமுனையில் இருந்தவர்கள் பெவிலியனுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பட்லருடன் மொயின் அலி சற்று நேரம் தாக்குபிடித்தார். இந்த ஜோடி 27 ரன்களை எடுத்தபோது, மொயின் அலி 14 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷமி வீசிய அடுத்த ஓவரில் பட்லரும் 30 ரன்களில் நடையைக்கட்டினார்.
ஷமி 150*:பட்லரின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 150ஆவது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். ஓவர்டனும் 8 ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்டானார். பின்னர், 9ஆவது விக்கெட்டுக்கு ஜோடி ஜார்ஜ் வில்லி - பிரைடன் கார்ஸ் ஜோடி 35 ரன்களை சேர்த்தது. நேற்றைய போட்டியில், இங்கிலாந்து பேட்டர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான்.