சென்னை: தென்னிந்திய கிரிக்கெட்டின் தந்தை என போற்றப்படுபவர் புஜ்ஜிபாபு. புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பை புஜ்ஜிபாபுவின் நினைவாக 1909ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2017ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. தற்போது 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புஜ்ஜிபாபு என பிரபலமாக அழைக்கப்படும் மொதவரப்பு வெங்கட மகிபதி நாயுடு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். சென்னை மாகாண அளவில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் அணி சார்பாக களமிறக்க முடிவு செய்தார்.
ஆனால் அப்போட்டி நடைபெறும் முன்னதாகவே 1908ஆம் ஆண்டு புஜ்ஜிபாபு மறைந்தார். அவரை கௌரவிக்கும் வகையில் 1909ஆம் ஆண்டு முதல் புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கியது. 1960ஆம் ஆண்டு வரை மாநிலத்திற்குட்பட்ட அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னெடுப்பின் காரணமாக மற்ற மாநில அணிகளும் பங்கேற்க துவங்கியது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பேங்க் ஆஃப் இந்தியா, நிர்லான்(பாத்திரம்), மஃபத்லால் (ஜவுளி) ஆகிய நிறுவனங்கள் சார்பில் விளையாடி வந்தனர். பின்னர் அந்தந்த மாநிலங்களில் பெயரிலேயே அணிகள் பங்கேற்றன.
புஜ்ஜிபாபு கிரிக்கெட் போட்டிகள் இந்திய வீரர்களுக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க சிறந்த பயிற்சியாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் கிரிக்கெட் கனவுகளுடன் வளரும் இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை நிருபிக்க நல்ல அடித்தளமாக அமைந்தது. முதல் தர போட்டிகளில் நன்றாக விளையாடும் பட்சத்தில் புஜ்ஜிபாபு கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் தேர்வு செய்யப்படுவர்.
இங்கும் நன்றாக விளையாடும் பட்சத்தில் ரஞ்சி கோப்பை அணியில் விளையாடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்டர் ஸ்ரீகாந்த், புஜ்ஜி பாபு கிரிக்கெட் கோப்பையின் முக்கியத்துவத்தை பற்றி சமீபத்தில் கூறியதாவது, "1971 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளுக்கு பிறகு புத்துணர்ச்சி பெற சுனில் கவாஸ்கர் ஜாலி ரோவர்ஸ் அணிக்கெதிராக ஏசிசி அணிக்காக சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற புஜ்ஜிபாபு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். இந்தியாவில் முதல் தர போட்டிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டது” என்றார். 2017ஆம் ஆண்டு வரை நடைபெற்ற புஜ்ஜிபாபு கிரிக்கெட் போட்டிகள், வீரர்களுக்கு அதிக போட்டிச் சுமை காரணமாக இந்திய வீரர்களின் உள்ளூர் கிரிக்கெட் அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது.
தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று தொடங்கவுள்ளது. இதுவரை 114 வருடங்களாக சென்னையில் மட்டுமே நடைபெற்ற புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பை முதல் முறையாக சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளாக கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. 4 நாள் போட்டியாக நடைபெறும் இந்த தொடரில் தமிழ்நாடு, கேரளா, ரயில்வேஸ், பரோடா, மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு அணிக்கு விஜய் ஷங்கர் தலைமை வகிக்கிறார்.
இதையும் படிங்க:ஜெர்மனி சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்கள்!