டெல்லி: உலகமே எதிர்பார்த்து காத்து இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அடுத்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கிறது. இதன் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும். 46 நாட்கள் நடக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த தொடர் இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. முதல் போட்டியாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்தியா அணி, தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சென்னையில் சந்திக்கிறது. மேலும், இத்தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனை கடந்த மாதம் இறுதியில் தொடங்கபட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்போட்டிகளை இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் நபர்கள் காணும் வகையில் கோல்டன் டிக்கெட்டை வழங்கும் நடைமுறையை கடந்த சில நாட்களாக பிசிசிஐ கடைபிடித்து வருகிறது. அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கி உள்ளார்.