மும்பை: மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் பதிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயண்ட்ஸ், உபி வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. இத்தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக்கின் இராண்டாம் பதிப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் வரும் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நிலையில், ஏலத்தில் பங்கேற்கும் வீராங்கனைகளின் பட்டியலை பிசிசிஐ இன்று (டிச.02) வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 165 வீராங்கனைகள் உள்ளனர். இதில் 15 வீராங்கனைகள் அசோசியேட் நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 165 வீராங்கனைகளில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த டியான்ட்ரா டாட்டின் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை கிம் கார்த் ஆகிய இருவர் மட்டுமே அதிக அடிப்படை விலையாக 50 லட்சத்தை கொண்டுள்ளனர்.
மகளிர் பிரீமியர் லீக்கின் 5 அணிகள் 60 வீராங்கனைகளை தக்கவைத்துக்கொண்டதுடன், 29 வீராங்கனைகளை விடுவித்துள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத் தொகையாக 2.1 கோடி பணத்தை மட்டுமே கொண்டுள்ளது. அதிகபட்சமாக குஜராத் அணி 5.95 கோடி பணத்தை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!