இங்கிலாந்தில் வரும் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும், 20 பேர் கொண்ட இந்திய முன்னணி வீரர்களையும், 4 காத்திருப்பு வீரர்களையும் பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதனால், இலங்கைத் தொடருக்கு இரண்டாம் நிலை வீரர்களை அனுப்ப வாரியம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், இலங்கைக்குச் செல்லும் இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகிய மூவரும் இங்கிலாந்து செல்வதால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு டிராவிட் சிறந்த தேர்வாக இருப்பார் என அனைவரும் கூறினர்.
டிராவிட் ஏற்கெனவே, இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், இந்திய 'ஏ' அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பேட்டிங் ஆலோசகராகவும் டிராவிட் செயல்பட்டுள்ளார்.
மேலும், இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், ப்ருத்வி ஷா, சுப்மன் கில் போன்ற இளரத்தங்களை பாய்ச்சி, கடந்து சில வருடங்களாக இந்திய அணியின் கட்டமைப்பில் பெரும் பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.
இதனால், இலங்கைத் தொடரில் இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளராக டிராவிட் செல்லும்பட்சத்தில், இந்திய அணிக்குப் பெரும் பலமாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதினர். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தில், இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜே ஷா தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- இந்திய அணி அறிவிப்பு!