ஐதராபாத் : 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. மேலும், உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை கோட்டைவிட்டதை அடுத்து ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்த பல்வேறு செய்திகள் பரவலாக பரவி வந்தன.
இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ராகுல் டிராவிட் மட்டுமின்றி இந்திய அணியின் உதவிக் குழு உறுப்பினர்கள் அனைவரின் ஒப்பந்தத்தையும் நீட்டித்து பிசிசிஐ அறிவித்து உள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்த நீட்டிப்பு எத்தனை நாட்களுக்கு என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ராகுல் டிராவிட் ஒப்பந்தம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட்டின் தொலைநோக்கு, தொழில்முறை மற்றும் தளராத முயற்சிகள் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய தூண்களாக உள்ளன என்று தெரிவித்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, எப்போதும் மிகுந்த கண்காணிப்பில் இருந்தவர் டிராவிட் என்றும் சவால்களை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.