டெல்லி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க சீசனில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நடப்பு சீசனுக்கான லீக் ஆட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் டாப் இடங்களில் உள்ள அணிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டன. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 புள்ளிகளில் முதல் இடத்திலும், இந்தியா 58.80 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டுக்கு தகுதி பெறும். அதன் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு 15 பேர் கொண்ட வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். ஏறத்தாழ 15 மாதங்களுக்குப் பிறகு அஜிங்ய ரஹானேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ரஹானே, கே.எல் ராகுல் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பணி கே.எஸ் பரத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.