சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது. பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியை, இந்திய தேர்வுக்குழு ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த 16 பேர் கொண்ட அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், காயத்திலிருந்து மீண்டு வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்திய பேட்ஸ்மேன் இஷான் கிஷன், தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, இந்திய அணியை வழிநடத்தும் நிலையில், துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.