மும்பை: தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது.
இந்த தொடரானது வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மொகாலியிலும், 2வது டி20 போட்டி 14ஆம் தேதி இந்தூரிலும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த பின்னர் டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவுக்கு தொடரை அடுத்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடம் ஆர்வம் காட்டியிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா இந்த அணியை வழிநடத்துகிறார்.
ஜிதேஷ் சர்மா முதன்மை விக்கெட் கீப்பராகவும், சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பராகவும் தேர்வாகியுள்ளனர். அணியில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என 4 ஸ்பின்னர்களை சேர்த்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் துணை கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
காயத்தில் சிக்கி இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விகீ), சஞ்சு சாம்சன் (விகீ), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
இதையும் படிங்க:காயம் காரணமாக ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகல்..!