கொழும்பு :ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டு உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் முதல் அணியாக இந்தியாவும், இரண்டாவது அணியாக இலங்கையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று (செப். 15) சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்காளதேசம் அணியில் தொடக்க வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. லிட்டன் தாஸ் முகமது ஷமி பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் தன்சித் ஹசன் 13 ரன்களில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேப்டன் ஷகீப் அல் ஹசன் மட்டும் போராடிக் கொண்டு இருக்க மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து இந்திய வீரர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நடையைகட்டத் தொடங்கினர். அதிரடியாக ஆடிய ஷகீப் அல் ஹசனும் தன் பங்குக்கு 80 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு உறுதுணையாக தவுஹித் ஹிரிதாய் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தட்டுத்தடுமாறில் கொண்டு இருந்த வங்காளதேசம் அணிக்கு இறுதி கட்டத்தில் நசுன் அஹமத் 44 ரன்கள் குவித்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூட் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பிரசீத் கன்னா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
வங்காளதேச அணியில் நிகழ்ந்தது போலவே இந்திய அணிக்கும் நிலை ஏற்பட்டது. மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் நிலைத்து நின்று விளையாடி மற்ற இந்திய வீரர்கள் எரிபந்து போல் களமிறங்கிய வேகத்தில் பெவிலியன் திரும்பினர். விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக முன்கள வரிசையில் களமிறக்கப்பட்ட திலக் வர்மா 5 ரன், கே.எல். ராகுல் 19 ரன், இஷன் கிஷன் 5 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
மறுபுறம் போராடிக் கொண்டு இருந்த சுப்மான் கில் சதம் அடித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அவருக்கு உறுதுணையாக சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நட்சத்திரத்தை மேகம் மறைத்தது போல் சுப்மான் கில் 127 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் மீண்டும் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் அக்சர் பட்டேல் (42 ரன்) ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு எடுபடவில்லை. 49 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி பந்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட முகமது ஷமி ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதன் மூலம் வங்காள்தேசம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரை விட்டு வெளியேறியது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (செப். 17) இதே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதையும் படிங்க :IND Vs BAN: இந்திய அணிக்கு 266 ரன்கள் இலக்கு!