துபாய் :19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. குரூப் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் இறுதி போட்டிக்கு வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேசம் அணிகள் இன்று (டிச. 17) மோதிக் கொண்டன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணியின் கேப்டன் அயன் அப்சல் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியில் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான அஷ்குர் ரஹ்மான் ஷிபில் 129 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து சவுத்ரி ரிஸ்வான் 60 ரன்களும், அரிபுல் இஸ்லாம் 50 ரன்களும் எடுத்து அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் அய்மன் அகமது 4 விக்கெட்டுகளையும் ஒமித் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 283 ரன்கள் இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரகம் அணி விளையாடிய நிலையில், அந்த அணிக்கு வங்கதேச வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். வங்கதேசத்தின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் திணறிப் போயினர். சீரான இடைவெளியில் அந்த அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.
24 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் தரப்பில் ரோஹனத் டவுல்லா போர்சன், மருப் மிருதா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இக்பாம் ஹூசைன் எம்மன், பர்வேஷ் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதன் மூலம் 195 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை கைப்பற்றியது. வங்கதேச வீரர் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இதையும் படிங்க :89 வருடத்திற்கு பின் முதல்முறை! சாதனை படைத்த சாய் சுதர்சன்! யார் இவர்?