புனே :கால் தொடைப் பகுதியில் தசை நார் கிழிவுக்கு சிகிச்சை பெற்று வரும் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இருந்து விலகினார். முன்னதாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் ஷகிப் அல் ஹசன் குணமடைந்தால் களமிறங்குவார் என வங்கதேச அணியின் பயிற்சியாளர் தெரிவித்து இருந்தார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளையாடவில்லை.
கடந்த 13ஆம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு தொடை பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது .
இந்த காயத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், இன்றைய ஆட்டத்தில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக வங்கதேசம் அணியை நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ வழிநடத்தி வருகிறார். ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக நசும் அகமது வங்கதேச அணியில் இடம் பிடித்து உள்ளார்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஷகிப் அல் ஹசன் 55 ரன்களும், 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். வங்காளதேச அணி வரும் 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டத்திற்குள் ஷகிப் அல் ஹசன் பூரண குணம் பெறுவார் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க :"இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல" - மிட்செல் சான்ட்னர்!