மும்பை :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக நடையை கட்டிய நிலையில், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 201 ரன்கள் குவித்து ஒன் மேன் ஆர்மியாக அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். மேலும் அவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் இரட்டை சதம் அடித்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகி உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அல்லாமல் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்து உள்ளார். 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு என்ற கணக்கில் பேட் கம்மின்ஸ் உடன் கைகோர்த்த மேக்ஸ்வெல், தனி நபராக அடித்து விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்து உள்ளார்.
மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் ஜோடி 202 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக அடித்தது. இதில் கம்மின்சின் எடுத்தது 12 ரன்கள் மட்டுமே. மீதமுள்ள 190 ரன்களை ஒற்றை ஆளாக மேக்ஸ்வெல் எடுத்து அதிரடி காட்டி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டு உள்ள அதில் மேக்ஸ்வெல் மட்டும் தொடக்க வீரர் அல்லாமல் இரட்டை சதம் அடித்தவர். மற்ற இரட்டை சதங்கள் அனைத்தும் ஓபனிங் பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர் அல்லாமல் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் கிளென் மேக்ஸ்வெல் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றை (நவ. 7) ஆட்டத்தில் 6வது வரிசையில் களமிறங்கிய மேக்ஸ்வெல், இரட்டை சதம் விளாசினார். ஆறாவது வரிசையில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் மேக்ஸ்வெல் வசமே சென்று உள்ளது.