மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த ஜன.7ஆம் தேதி நடைபெற்றது. அதில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று (ஜன.9) மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் ஷஃபாலி வர்மா, தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். முதல் ஓவர் முடிவில், இந்திய மகளிர் அணி 7-0 என்ற கணக்கில் இருந்தது.
அதன்பின், இருவரும் சிறப்பாக விளையாடிய நேரத்தில், ஸ்மிருதி மந்தனா 3வது ஓவரில் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். ஷஃபாலி வர்மா 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி, இந்திய அணிக்கு ரன்களை குவித்தார். 4 ஓவர் முடிவில் இந்திய அணி 32 ரன்கள் எடுத்திருந்தது.
களத்தில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா, ஆஸ்திரேலிய அணி வீரர் ஹீலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 5 ஓவர் முடிவில் இந்திய அணி 39-1 என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், சொற்ப ரன்கள் எடுத்து தங்களது ஆட்டத்தை இழந்தனர். பின் ரிச்சா கோஷ் - தீப்தி சர்மா ஜோடி களமிறங்கி, சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13வது ஓவரில் ரிச்சா கோஷ் தனது முதல் சிக்ஸை பதிவு செய்தார்.
இந்திய அணி 13 ஓவர் முடிவில், 91-4 என்ற கணக்கில் இருந்தது. சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 18 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து 14.4வது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்த ரிச்சா கோஷ் 19.1வது ஓவரில் கார்ட்னர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் போல்ட் ஆனார். (ரிச்சா கோஷ் 28 பந்துகளில், 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் வீதம் 29 ரன்கள் எடுத்தார்) இறுதியாக 20 ஓவர் முடிவில், இந்திய அணி 147-6 என்ற கணக்கில் இருந்தது.