லண்டன்:டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் நடக்கக்கூடிய ஆஷஸ் தொடர் புகழ்பெற்றது. ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 28-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவின் துவக்க ஜோடியாக வார்னர், கவாஜா களமிறங்கினர். கவாஜா பெரிதாக ரன் சேர்க்காமல் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 66 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்ததாக லபுஷேன் 47 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 77 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் கேரி 22 ரன்களிலும், ஸ்டார்க் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் சதம் அடித்த நிலையில் 110 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அனைத்து வீரர்களின் பங்களிப்பினால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் சேர்த்தது.
இதனை அடுத்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை ஸாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் தொடங்கினர். இந்த ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்த நிலையில், கிராவ்லி 48 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 42 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 10 ரன்களில் வெளியேறினார்.
நிலைத்து நின்று ஆடிய பென் டக்கெட் 98 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹேரி புரூக் மட்டும் குறிப்பிடும் படியாக ஆடி 50 ரன்கள் சேர்த்தார். பிற வீரர்கள் யாரும் பெரும் பங்களிப்பு அளிக்காததால் இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்சில் 325 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.