தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs AUS 2nd ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி - 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

By

Published : Mar 19, 2023, 9:15 PM IST

விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. மும்பையில் கடந்த 17ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மிட்செல் ஸ்டாக் பந்துவீச்சில், கில் ஆட்டமிழந்தார். ஸ்டாக்கின் துல்லியமான பந்துவீச்சில், இந்திய அணி ஆட்டம் கண்டது. ரோஹித் சர்மா 13, சூர்யகுமார் யாதவ் 0, கே.எல்.ராகுல் 9 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். விராட் கோலி மட்டும் சற்று தாக்கு பிடித்து 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 117 ரன்களுக்கு சுருண்டது. அக்சர் படேல் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிட்செல் ஸ்டாக் 8 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் இவர் வீழ்த்தும் 9வது 5 விக்கெட்கள் ஆகும். அபாட் 3 விக்கெட்களும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

118 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாக விளையாடினர். இவர்களது விக்கெட்களை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சி பலன் தரவில்லை. இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். 11 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டாக் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியால் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

குறைந்தபட்ச ஸ்கோர்: இந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இந்திய அணி எடுக்கும் 4வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். 1987ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 78 ரன்கள் எடுத்ததே மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம், ஜூன் 7ம் தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் நாளை வரை இணைய சேவை முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details