அகமதாபாத்: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று (நவ. 19) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் கோப்பையை தனது காலுக்கு ஸ்டாண்ட் போல் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவு செய்திருந்தார்.
இதனை கண்ட சில கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பையை மிட்செல் மார்ஷ் அவமதித்துவிட்டார் என கடுமையாக சாடி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஐசிசி இது தொடர்பாக மிட்செல் மார்ஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு பயனர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம், சிலர் அது கோப்பை மட்டுமே, ஆணவமல்ல. அது அவர்களின் ஆதிக்கம். தேவையில்லாமல் இதை பெரிதாக்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டில், பல அணிக்களுக்கு உலகக் கோப்பை என்பது கனவாக இருந்து வரும் பட்சத்தில், அதனை மதிக்காமல் காலின் கீழ் வைத்திருப்பது கவலை அளிக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:"நாங்கள் மீண்டு வருவோம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!" - முகமது ஷமி உருக்கம்!