ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டு தொடர் சினாவின் ஹாங்சோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் காலிறுதி கடந்த 4ம் தேதி முடிவடைந்த நிலையில், தொடரின் அரையிறுதி போட்டிகளுக்கு வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின.
அதனை தொடர்ந்து, இன்று காலை 6.30மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் - இந்திய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இந்திய அணி வங்கதேசம் அணியை மிக எளிதாக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களுடனும், திலக் வர்மா 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மற்றொரு அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரீத் அகமது 3 விக்கெட்டும், கைஸ் அகமது மற்றும் ஜாஹிர் கான் தலா இரண்டு விக்கெட்டும் விழ்த்தினர். பின்னர் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்து இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில், இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை நாளை சந்திக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று முதல் இடம் பிடிப்பவர்களுக்குத் தங்கம் பதக்கமும், தோல்வி அடையும் அணி அதாவது (Runner up) இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும். அதே போல் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் 3வது இடத்திற்காக நாளை மோதுகிறது. இந்த போட்டியானது நாளை காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெல்லும் அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆசிய விளையாட்டில் இந்தியா பதக்க அறுவடை! எந்ததெந்த விளையாட்டுல என்னென்ன பதக்கம் தெரியுமா?